என்ன சத்தம் இந்த நேரம்? என்று கேட்கும் பரபரப்பான கதை ‘ரீ ‘
அருகில் அலறும் மர்மம் பற்றிப் பேசும்படம் ‘ரீ ‘
முற்றிலும் வணிக மயமாகிப் போய்விட்ட இந்த வாழ்க்கைச் சூழலில் தொழில்நுட்பம் உலகத்தை உள்ளங்கைக்குள் இணைக்கிறது .உலகத் தொடர்புகள் மிக விரைவில் சாத்தியமாகிறது.ஆனால் அருகிலிருக்கும் வீடுகளில் இருப்பவர் யார்? அங்கு என்ன நடக்கிறது என்று தெரிவதில்லை.
ஆனால் ‘ரீ ‘ படத்தின் கதாநாயகி அப்படி இருப்பவள் அல்ல.அவளது பக்கத்து வீட்டிலிருந்து ஒரு சத்தம் வருகிறது .அது அவளை அலைக்கழிக்கிறது. அவளைச் சமநிலை இழக்கச் செய்கிறது.
என்ன சத்தம் இந்த நேரம்? பேயின் ஒலியா? மனிதனின் வலியா?என்று அறிய முற்படுகிறாள்.ஆனால் பக்கத்து வீட்டில் ஒரு நாகரிகமான டாக்டர் குடும்பம் தான் வசிக்கிறது. இந்நிலையில் எங்கிருந்து சத்தம் வருகிறது அதன் பின்னணி என்ன என்று ஆராய முற்படும் போது பல மர்மங்கள் விரிகின்றன. எதிர்பாராத திசையில் சம்பவங்கள் நடக்கின்றன. அவை என்ன ? அவற்றைப் பற்றிப் பேசும் படம் தான் ” ரீ’.
இப்படத்தை சுந்தரவடிவேல் எழுதி இயக்கியுள்ளார் .அவரே தனது ஸ்ரீஅங்கா புரொடக்ஷன்ஸ்
சார்பில் தயாரித்துள்ளார்.
சினிமாவின் மீது தீராத காதல் கொண்ட இயக்குநர் சுந்தரவடிவேல் மதுரையைச் சேர்ந்தவர். தனியார் திரைப்படக் கல்லூரிகளில் திரைப்படக்கலைப் படிப்பினை முடித்தவர், குடும்ப நிர்ப்பந்தத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையில் சில காலம் பணியாற்றினார்.
ஒரு கட்டத்தில் தன் கனவை நிறைவேற்ற, களத்தில் குதித்திருக்கிறார் .
திரையுலகின் கள அனுபவம் வேண்டி ‘சண்டி முனி’ படத்தில் பணியாற்றியிருக்கிறார். ‘வலியோர் சிலர்’ படத்தில் நடித்திருக்கிறார். இப்படி பரவலாகத் திரையுலக அனுபவம் பெற்றிருக்கிறார்.
அப்படிப்பட்ட அவர் உருவாக்கியிருக்கும் படம் தான் ரீ.
இது கதாநாயகியை மையப்படுத்திய கதை கொண்ட படம்.
இப்படத்தில் ‘ ஹர மகாதேவி ‘ படத்தில் நடித்த காயத்ரி ரமா நாயகியாக நடித்துள்ளார்.பாலச்சந்தரின் ஆஸ்தான எழுத்தாளர் அனந்துவின் தங்கையின் பேரன் பிரசாந்த் ஸ்ரீனிவாசன் நாயகனாக நடித்துள்ளார்.மேலும் பிரசாத் , சங்கீதா பால், மணி சங்கர் ,சுரேஷ் பாபு ஆகியோரும் நடித்துள்ளனர். படத்தின் இயக்குநரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
படத்திற்கு ஒளிப்பதிவு தினேஷ்ஸ்ரீநிவாஸ், பின்னணி இசை ஸ்பர்ஜன் பால் , பாடல் இசை ஹரிஜி, எடிட்டிங் கே.ஸ்ரீனிவாஸ்.
மதுரையும் மதுரையைச் சுற்றியுள்ள இடங்களிலும் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. கதையின பெரும்பகுதி இரண்டு வீட்டில் நடக்கும் படி உருவாகியுள்ளது.
”சிறு பட்ஜெட்டில் ஆரம்பித்த இந்தப் படம், கணிசமான நடுத்தர பட்ஜெட் நிலைக்குக் கொண்டு சென்று ஒரு முழுமையான தரமான படமாகவும் விறுவிறுப்பான படமாகவும் உருவாகியிருக்கிறது,” என்கிறார் இயக்குநர் சுந்தரவடிவேல்.
த்ரில்லர் பட ரசிகர்களின் நெஞ்சில் ரீங்காரம் செய்யும் வகையில் விரைவில்’ ரீ’ வெளிவர இருக்கிறது.