இந்திய இசைக்கு சர்வதேச மகுடம், பிரான்ஸ் அரசின் உயரிய கௌரவமான செவாலியர் விருதை பெற்றார் அருணா சாய்ராம்
*தனக்கு மிகவும் பிடித்த நடிகரான நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பெற்ற விருதை தானும் பெற்றதில் அருணா சாய்ராம் பெருமிதம்*
தனது இசைப் பணியால் அற்புதங்களையும் அதிசயங்களையும் படைத்து வரும் திருமதி அருணா சாய்ராம் கர்நாடக இசை உலகின் ராக் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுவது அனைவரும் அறிந்ததே.
பத்மஸ்ரீ, சங்கீத கலாநிதி உள்ளிட்ட உயரிய விருதுகளை இதுவரை வென்றுள்ள அருணா சாய்ராம், தற்போது தனக்கும், கர்நாடக இசைக்கும் மட்டுமில்லாமல் இந்திய நாட்டுக்கே பெரும் கௌரவத்தை ஈட்டித் தந்துள்ளார். ஆம், பிரான்ஸ் நாட்டின் மிகப் பெரிய விருதான உலக அளவில் பெரிதும் மதிக்கப்படும் செவாலியர் விருது ஜூலை 15 அன்று அவருக்கு வழங்கப்பட்டது.
இந்த விருதை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இதற்கு முன்னர் பெற்றது நம் அனைவருக்கும் தெரியும். மும்பையில் சிறு வயது முதல் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த படங்களை அங்குள்ள திரையரங்குகளில் பேரார்வத்துடன் பார்த்து ரசித்ததை அவர் நினைவுக் கூர்ந்த அருணா சாய்ராம்., நடிகர் திலகத்தின் மிகப் பெரும் ரசிகையான நான், அவர் பெற்ற விருதை பெறுவது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம் என்றார்.
கர்நாடக இசைப் பாடகர், இசையமைப்பாளர் மற்றும் பேச்சாளரான அருணா சாய்ராம், பிரான்ஸ் அரசின் உயரிய கௌரவமான செவாலியர் விருதை தான் பெறுவதற்கு காரணமான தனது ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.
பாடும் திறமைக்காக மட்டுமல்லாமல், இந்திய-பிரான்ஸ் உறவின் வளர்ச்சிக்காக அருணா சாய்ராம் ஆற்றிய பங்களிப்பிற்காகவும் இந்த விருதுக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.