எஸ். ஆர். எம். கல்வி நிறுவனத்தில்
இந்திய அளவிலான மாபெரும் குறும்பட விருது விழா
எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத்தின் அறிவியில் கலையியல் புலத்தின் காட்சித் தொடர்பியல் துறை காஸ்ட்டிரீ நிறுவனத்துடன் இணைந்து இந்திய அளவிலான மாபெரும் குறும்பட விருது விழாவைச் சென்னைக் காட்டாங்குளத்தூரில் கடந்த 13.02.2019 முதல் 15.02.2019 வரை நடத்தியது. இவ்விழாவில் அறிவியல் மற்றும் கலையியல் புலத்தின் துணைத் தலைவர் முனைவர் ஸ்ரீதர் கிருஷ்ணசாமி வரவேற்புரை நிகழ்த்தினார். ‘காஸ்ட்டிரீ’ அமைப்பின் செயல்பாடுகள் குறித்து அந்த அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி திரு. நவீன் எடுத்துரைத்தார். குறும்பட விழாவில் பங்குபெற்றவர்களையும், இவ்விழா சிறப்பாக அமைய காரணமாக இருந்தோர்களையும் குறித்து எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத்தில் இணைத்துணை வேந்தர் முனைவர் இர. பாலசுப்பிரமணியன் வாழ்த்துரை வழங்கினார். எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத்தின் நிறுவன வேந்தர் டாக்டர் தா.இரா. பாரிவேந்தர் தலைமையுரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றத் திரைப்பட இயக்குநர் திரு. கே. பாக்யராஜ் குறும்படங்கள் குறித்துச் சிறப்புரையாற்றினார்.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து சுமார் 750-க்கு மேற்பட்ட குறும்படங்கள் போட்டிக்கு வந்தன. இப்போட்டியில் வென்ற குறும்படங்களுக்குத் தங்கத் திரைப்படம், வெள்ளித் திரைப்படம் போன்ற விருதுகள் வழங்கப்பட்டன. மேலும், சிறப்பாக நடித்த ஆண் கதாபாத்திரம், பெண் கதாபாத்திரம், சிறந்த இயக்குநர்,இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், திரைக்கதையாசிரியர் மற்றும் படத்தொகுப்பாளர் போன்ற பிரிவின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டன.
தங்கத்திரைப்படம் விருதை நாவாஸ் சலாம் இயக்கிய மலையாள மொழிக் குறும்படமான ‘எண்டே நூரா’ (Ante Noora) பெற்றது. வெள்ளித்திரைப்படம் விருதை டி.எஸ். பிரசன்னா இயக்கிய ‘அன்’ (A(u)N) என்ற குறும்படம் பெற்றது. எண்டே நூரா என்ற குறும்படத்தில் நடித்த ‘அதுல்’ சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார். ‘ஆண்டி ஜி’(Aunty Ji) திரைப்படத்தில் நடித்த ‘அன்மோல் ராட்ரிகுஸ்’ சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார். சிறந்த இயக்குநருக்கான விருது மற்றும் இசையமைப்பாளருக்கான விருதுகளை முறையே ‘எண்டே நூரா’ குறும்படத்தின் இயக்குநர் நாவாஸ் சலாம் மற்றும் இசையமைப்பாளர் சுமேஷ் சோமசுந்தர் பெற்றனர். சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது மலையாள மொழிக் குறும்படமான ‘சூண்டல்’ (choondal) என்ற குறும்படத்தின் ஒளிப்பதிவாளர் ’ஆதர்ஷ் சதாநந்தனு’க்கு வழங்கப்பட்டது. ‘ஆண்டிஜி’ (Aunty Ji) என்ற இந்தி மொழி குறும்படத்திற்குத் திரைக்கதை எழுதிய ‘அதீப் ராய்ஸூக்குச்’ சிறந்த திரைக்கதையாசிரியர் விருது வழங்கப்பட்டது. சிறந்த படத்தொகுப்பிற்கான விருது ‘பிளின்ங்’ (Blink) குறும்படத்தின் படத்தொகுப்பாளர் ‘பிரதீப் விஜயராஜூ’க்கு வழங்கப்பட்டது. இவ்விழாவின் நிறைவாக காட்சித் தொடர்பியில் துறையின் துறைத் தலைவர் திரு. ஆர். ராஜேஷ் நன்றியுரை வழங்கினார்.