” கழுகு – 2 ” தமிழ் திரைப்பட விமர்சனம் – மதிஒளி ராஜா

கழுகு திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அதன் தொடர்ச்சியாக கழுகு – 2 உருவாகியுள்ளது. முதல் பகுதிக்கும் இப்படத்தின் கதைக்கும் துளி கூட சம்பந்தம் கிடையாது. நாயகன்/நாயகி காதல் மற்றும் காதல் உணர்வு மட்டுமே தொடர்பு.
கதை சுருக்கம் :-
கொடைக்கானல் காட்டில் செந்நாய்களின் அட்டகாசம் அதிகம் அந்த காட்டில் மர விறகு/சுள்ளி எடுத்து வரும் பெண்களை செந்நாய் கூட்டம் கொன்று தின்பதாக கதை ஆரம்பிக்கிறது. அதனால், அந்த காட்டில் ஆள் நடமாட்டமே இல்லாமல் இருக்கிறது. அந்த காட்டின் மரம் அறுக்கும் காண்ட்ராக்டை எம்.எல்.ஏ. உதவியுடன் எடுக்கிறார் வெங்கட் சுபா. துப்பாக்கி துணையுடன் செந்நாய்களை விரட்டி விட்டு ஊர் மக்களை வைத்து மரங்களை வெட்டி விடலாம் என திட்டமிடுகிறார் அதற்காக தனது உதவியாளர் எம்.எஸ்.பாஸ்கரை சிறந்த இரண்டு துப்பாக்கி வீரர்களை அழைத்து வர சொல்கிறார்.
தேனி மாவட்டத்தில் சின்ன சின்ன திருட்டை தனது நண்பன் காளி வெங்கட்டுடன் செய்து வருகிறார் நாயகன் கிருஷ்ணா. ஒருமுறை அவர்கள் செய்யும் சின்ன திருட்டு மூலமாக பெரிய சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள். அதனால், பெரிய தண்டனைக்கு பயந்து நீதிமன்றம் செல்லும் வழியில் போலீஸ் துப்பாக்கியை எடுத்து கொண்டு இருவரும் தப்பி ஓட அந்நேரம் அங்கு வரும் எம்.எஸ்.பாஸ்கர் பார்வையில் இவர்கள் இருவரும் துப்பாக்கியுடன் போலீஸை துரத்துவதாக நினைத்து கொண்டு தனது முதலாளியின் காட்டில்  செந்நாயிடமிருந்து மரம் வெட்டுபவர்களுக்கு பாதுகாப்பு வேலைக்காக கூப்பிட போலீஸில் இருந்து தப்பிக்க ஒரு புகலிடம் கிடைப்பதால் இதுதான் சமயம் என சம்மதிக்கின்றனர்.
செந்நாய் என்றால் தெரு நாய் போல் நினைத்து கல்லெறிந்தாலோ அல்லது பிஸ்கட் போட்டு சரி கட்டி விடலாம் என நம்பி கொடைக்கானல் காட்டிற்கு பாதுகாப்பிற்காக செல்கின்றனர்.
வேலைக்கு செல்லும் முதல் நாளே எம்.எஸ்.பாஸ்கர் மகள் நாயகி பிந்து மாதவிக்கு பாதுகாப்புக்காக தண்ணீர் எடுக்க செல்லும் கிருஷ்ணா  இருவரும் அங்கு வந்த செந்நாயிடம் சிக்கி கொள்கின்றனர். அப்போதே பிந்து மாதவி, கிருஷ்ணா பித்தலாட்டக்காரன் என்பதை அறிந்துக் கொள்கிறாள்.
பிந்து மாதவி பசி என்று யார் சொன்னாலும் சற்றும் தயங்காமல் தனது உணவையோ, தெரிந்தவர்களிடமோ வாங்கி கொடுத்தாவது பசியை போக்கும் குணம் படைத்தவள். கிருஷ்ணா தான் வயிற்று பிழைப்புக்காக தான் பொய் சொன்னேன் என கூற ஊர் மக்களிடம் கிருஷ்ணாவை பற்றிய ரகசியத்தை மறைக்கிறார்.
நல்ல பழக்கமாக இருந்த கிருஷ்ணா – பிந்து மாதவி நட்பு காதலாக மாறுகிறது. ஊர் கட்டுபாடு இவர்களது காதலுக்கு தடையாக அமைகிறது. மேலும் ஒரு சம்பவம் இருவரது வாழ்க்கையையும் புரட்டி போடுகிறது.
ஊர் மக்கள் இவர்களது காதலை ஏற்று கொண்டார்களா ? இருவரும் ஊரை விட்டு சென்றார்களா ? வாழ்கையை புரட்டி போட்ட சம்பவம் என்ன ? அதில் இருந்து இந்த ஜோடி மீண்டார்களா ? என்பதை வெள்ளித்திரையில் காண்க.
கழுகு முதல் பாகம் வெளிவந்து இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு கூட கிருஷ்ணா – பிந்து மாதவி காதலில் இளமைக்கு எந்த குறையும் இல்லை. இளமை கொஞ்சி விளையாடுகிறது. காளி வெங்கட் நகைச்சுவை படத்திற்கு பக்கபலம். எம்.எஸ்.பாஸ்கர், வெங்கட் சுபா சரியான தேர்வு. அனைத்து நடிகர்/நடிகைகளும் தங்களது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளனர்.
யுவனின் இசையில் பாடல்கள் அனைத்தும் சிறப்பாக அமைந்துள்ளது. பின்னனி இசை படத்தை வேறு தளத்திற்க்கு கொண்டு சென்றுள்ளது. ராஜா பட்டாஜார்ஜியின் ஒளிப்பதிவு கண்களுக்கு குளிர்ச்சி குறிப்பாக காட்டு பகுதி காட்சிகள் நம்மை நேரடியாக அங்கேயே அழைத்து செல்கிறது.
இயக்குனர் சத்ய சிவாவின் கதையமைப்பு, திரைக்கதை மற்றும் வசனம் படத்திற்கு நல்ல தரத்தையும், விறுவிறுப்பையும் கொடுத்துள்ளது.நேர்த்தியான நெறியாள்கை மற்றும் படப்பிடிப்பு தளம் தேர்ந்தெடுத்த விதம் இப்படத்தை மற்ற படங்களிடமிருந்து வேறு படுத்தி காட்டியுள்ளது.
மிகுந்த பொருட்செலவில் தரமான படத்தை தயாரித்த தயாரிப்பாளருக்கு பாராட்டுகள்.
காதல், த்ரில் மற்றும் ஜனரஞ்ஜக திரைப்பட ரசிகர்ளுக்கு இப்படம் நல்ல விருந்து. நல்ல பொழுதுப்போக்கு திரைப்படம். இப்படம் அனைவருக்கும் மனநிறைவு அளிக்கும்.
நடிகர்/நடிகையர் :-
கிருஷ்ணா, பிந்து மாதவி, காளி வெங்கட், எம்.எஸ்.பாஸ்கர், வெங்கட் சுபா மற்றும் பலர்…
தொழில்நுட்ப கலைஞர்கள் :-
இசை : யுவன் சங்கர் ராஜா
ஒளிப்பதிவு : ராஜா பட்டாஜார்ஜி
படத்தொகுப்பு : கோபி கிருஷ்ணா
இயக்கம் : சத்ய சிவா
தயாரிப்பு : சிங்காரவடிவேலன்

You May Also Like

More From Author