டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன் சார்பாக வெடிக்காரன்பட்டி சக்திவேல் தயாரிக்க, பிஜி முத்தையா இயக்கத்தில், ஆர்யா – சித்தி இட்னானி நடித்திருக்கும் திரைப்படம் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்.
இப்படத்தில் 33 முக்கிய கதாப்பாத்திரங்கள், இதில் 7-8 பேர் நல்லவர்கள், மீதி அனைவரும் வில்லன்கள். எந்த பக்கம் பார்த்தாலும் வில்லன்கள். 20 சண்டைகள், 5 பாடல்கள், பின்னணி இசை அதிரடி சத்தம். நடுநடுவே காட்சிகள். பாதி படம் சண்டை இயக்குனர் இயக்கம். ஜாதி மதம் இரண்டும் வைத்து பிரிவினை கதை.
யாருக்கு யார் சொந்தம் பந்தம் என்று இயக்குனருக்கே குழம்பி விடும் அளவு சிக்கலான கதைக்களம். நிச்சயம் ரசிகருக்கு புரியவே புரியாது. லாஜிக் மீறல்கள் அதிகம். நாடக தன்மை கூடுதல்.
கிராமத்து நாயகன் வட சென்னை கானா பாடல் பாடுவதும் இன்னொரு பாடலில் தெலுங்கு, ஹிந்தி வரிகள் மக்களை முட்டாள் என நினைத்து விட்டார்கள் போன்று தெரிகிறது.
கே பாக்யராஜ் தான் ஆர்யா அப்பா என்று கூறும் போது குபீர் சிரிப்பு வருகிறது. ஆர்யாவுக்கு கிராமத்து வேடம் ஒத்து வரவில்லை. நாயகி, பிரபு, ரேணுகா நடிப்பு மனதிற்கு ஆறுதல். ஜிவி பிரகாஷ் ஏமாற்றியுள்ளார்.
கதைக்களம்:-
தாய் தந்தை இல்லாமல் தனியாக வாழும் நாயகி சித்தி இட்னானியை அவரிடம் இருக்கும் சொத்துக்கு ஆசைப்பட்டு அவரைத் திருமணம் செய்ய முரட்டு முறை மாமன்கள் வற்புறுத்தி வருகின்றனர். ஆனால் சித்தி இட்னானி அவர்களை அறவே வெறுக்கிறார். இதற்கிடையே ஜெயிலில் இருக்கும் காதர் பாட்சா ஆர்யாவை பார்க்க நாயகி செல்கிறார். ஆனால் போன இடத்தில் மனம் மாறி திரும்பி வந்து விடுகிறார்.
இதை அறிந்து கொண்ட ஆர்யா, ஜாமினில் வெளியே வந்து சித்தி இட்னானியை தேடி அவர் ஊருக்கு வருகிறார். வந்த இடத்தில் நாயகியின் முறை மாமன்களோடு ஏற்படும் தகராறில் அவர்கள் குடும்பத்தில் இருக்கும் மூன்று தலைக்கட்டுகளை போட்டு அடித்து வெளுத்து விடுகிறார். இதையடுத்து நாயகியின் பிரச்சனையை அறிந்து கொண்ட ஆர்யா நாயகிக்கு அரணாக அங்கேயே தங்கி விடுகிறார்.
இதற்கிடையே ஆர்யாவின் ஃப்ளாஷ் பேக்கில் அவரின் வளர்ப்பு அப்பா பிரபுவுக்கு ஏற்பட்ட அவமானத்திற்காக அவரின் எதிரிகளை தன் சொந்த ஊரில் பந்தாடி விட்டு ஜெயிலுக்கு சென்று விடுகிறார்.
இப்படி ஆர்யாவின் எதிரிகளும் சித்தி இட்னானி எதிரிகளும் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில் ஒன்று கூடி ஆர்யாவையும், நாயகி சித்தி இட்னானியையும் பழிவாங்க படையெடுக்கின்றனர்.
இதைத் தொடர்ந்து அந்த கும்பலிடம் இருந்து ஆர்யா சித்தி இட்னானியை காப்பாற்றினாரா, இல்லையா? என்பதே காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்தின் மீதி கதை.
ஒரு கதையாக பார்க்கும் பொழுது இதில் பெரிதாக ஒன்றும் இல்லை. எப்போதும் போல் ஒரு பழிவாங்கல் கதையை தன் பாணியிலேயே கொடுத்திருக்கிறார் இயக்குநர் முத்தையா.
பொதுவாக முத்தையா படங்கள் என்றாலே ஆக்ஷன் காட்சிகள் மிகச் சிறப்பாக அமைந்திருக்கும். அதுவே படத்திற்கு மிகப்பெரிய ப்ளஸ் ஆக அமைந்து பல படங்கள் வெற்றி பெற்றிருக்கின்றன. இதை யாரோ போய் முத்தையாவின் காதில் பலமாக கூறி இருப்பார்கள் போல் இருக்கிறது. இதனாலேயே இப்படம் ஆரம்பித்து முடியும் வரை வெறும் சண்டைக் காட்சிகளை வைத்தே முழுப் படத்தையும் முடித்திருக்கிறார். முதல் பாதையில் மட்டுமே ஐந்து முதல் ஆறு ஃபைட் சீன்கள் வந்து தெறிக்க விட்டிருக்கிறது. அதேபோல் இரண்டாம் பாதியிலும் மூன்று நான்கு ஃபைட் சீன்கள் வந்து வெட்டுக் குத்து, ரத்தம், வெடிகுண்டு என தியேட்டர் ஸ்கிரீனை தெறிக்க விட்டு படம் முடிகிறது. இதற்கு நடுவே ஆங்காங்கே சில சென்டிமென்ட் காட்சிகளும், குடும்ப காட்சிகளும், காதல் காட்சிகளும், பாடல் காட்சிகளும் செருகி படத்தை ரசிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் முத்தையா.
மதிஒளி ராஜா