நீலம் ப்ரொடக்சன்ஸ் – பா.இரஞ்சித் வெளியீடு
தயாரிப்பு – யாழி பிலிம்ஸ் தயாரிப்பாளர் – விக்னேஷ் சுந்தரேசன்
இயக்குனர்கள் – மனோஜ் லியோனல் ஜாசன், ஷ்யாம் சுந்தர்
கதை, திரைக்கதை, வசனம் – G. இராஜேஷ்
ஒளிப்பதிவாளர் – கார்த்திக் முத்துகுமார்
படத்தொகுப்பு – MKP கிரிதரன்
பின்னணி இசை – பிரதீப் குமார், மார்டின் விஸ்ஸர்
பாடல்கள் இசை – பிரதீப் குமார்
ஒலி வடிவமைப்பாளர் – அந்தோனி BJ ரூபன்
கலை இயக்குனர் – ராமு தங்கராஜ்
நடிகர்கள் – கலையரசன், அஞ்சலி பாட்டீல், சேத்தன், ஆனந்த்சாமி, செளமியா, மானசா, பரிதிவாலன், ஆறுமுகவேல், லட்சுமி பாட்டி, ஆதிரா பாண்டிலட்சுமி, ரவிந்திரா விஜய், பிரதீப் K விஜயன், KSG வெங்கடேஷ், SD பாலகுமாரன், ஸ்வேதா டோரதி, அன்னபூரணி
குதிரைவால் – வித்தியாசமாக இருந்த படத்தின் ட்ரெய்லர் அதிக எதிர்பார்ப்பை உண்டாக்கி இருந்தது. அறிமுக இயக்குனர்கள் மனோஜ் மற்றும் ஷியாம் ஆகியோரின் இயக்கத்தில் குதிரைவால் திரைப்படம் உருவாகி இருக்கிறது.
படத்தின் முன்னணி கதாப்பாத்திரமான சரவணன் (கலையரசன்), தூக்கத்தில் இருந்து விழித்து கொண்டபோது தனக்கு குதிரை வால் முளைத்திருப்பதை உணர்கிறார். கனவில் நடந்ததை நிஜத்தில் தேடுகிறார். வயதான பாட்டியிடம், கணித ஆசிரியரிடம், ஜோதிடரிடம் என ஒவ்வொருவரின் உதவியைத் தேடி செல்கிறார். “இது எப்படி எனக்கு முளைச்சிருக்கு” என கேள்வி கேட்டுக்கொண்டே விடை தேடுகிறார்.
பதில் தேடிச் செல்லும் அவருக்கு, நிஜ வாழ்க்கையில், அவர் வேலை செய்யும் பணி இடத்தில் சில மாறுதல்களை உணர்கிறார். சரவணனால், சரவணனாக இருக்க முடியவில்லை. வேறொருவராக உணர்கிறார். அதை கனவிலும், நிஜத்திலும் தேடி செல்கிறார்.
சரவணனின் வாயிலாக படம் பார்க்கத் தொடங்கிய நமக்கு, படத்தின் முதல் அரை மணி நேரம் கடந்த பின்பு படம் நமக்கான ஒரு புதிய அனுபவத்தை தர ஆரம்பிக்கிறது. கேள்விகள் எழுகின்றன, சந்தேகங்கள் வருகின்றன. எனினும், அதை கடந்து பார்க்கும் ஒரு திரை அனுபவத்தை நேர்த்தியாக தந்திருக்கிறது படக்குழு.
இதில், கார்த்திக் முத்துக்குமாரின் ஒளிப்பதிவு, கிரிதரனின் படத்தொகுப்பு பணி குறிப்பிட்டு சொல்லும்படி உள்ளது. இப்படி இருந்திருக்கலாம், அப்படி இருந்திருக்கலாம் என்ற எண்ண ஓட்டத்திற்குள் நம்மை செல்ல விடாமல், கனவுக்கும் நினைவுக்கும் இடையேயான இந்த பயணத்தை அனுபவியுங்கள் என திரை சொல்லலில் எங்கேயும் சமரசம் இல்லாமல் காட்சிப்படுத்தி இருக்கின்றனர்.
டெக்னிக்கலாக படம் அதிகம் பேசப்படும். கலையரசனின் திரை பயணத்தில் இது ஒரு முக்கியமான படம். பிரதீப், மார்டின் விசரின் இசையமைப்பு படத்தில் எங்கும் நெருடலாக இல்லை. சொல்லப்போனால், படத்தின் ஒரு காட்சியில், “பறந்து போகின்றேன்” என பிரதீப்பின் குரல் ஒலிக்கும்போது உண்மையாக நம்மை மெய்மறக்க செய்தது..
தமிழ் சினிமாவில் குதிரைவால் புதிய முயற்சியாகவும், பல புதிய படைப்புகளின் முன்னோடியாகவும் இருக்கும். ஆனால், அந்த முயற்சிகள் அனைத்து தரப்பு சினிமா ரசிகர்களையும் சென்றடையுமா என்பது சந்தேகமே. இது படக்குழுவினருக்கும் தெரிந்திருக்கும் என்றாலும், அவர்கள் பேசி இருக்கும் அறிமுகப்படுத்தி இருக்கும் கதைகளும், மனிதர்களும், தியரிகளும் இன்னும் கொஞ்சம் விளங்கும்படி இருந்திருக்கலாம். புரிந்து கொள்ள முடியுமா என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபடும், ஆனால் நிச்சயம் குதிரைவால் புதிய அனுபவத்தை தரும்.தேடலுக்கு விதைப்போட்டிருக்கும் குதிரைவால், புது முயற்சியில் வெற்றி கண்ட குதிரையாகவே தனி இடத்தைப் பிடித்திருக்கிறது.
மதிஒளி ராஜா