*சமூக வலைத் தளங்களை தெறிக்கவிட்ட தமிழ் பாடல்*
சமூக வலைத் தளங்களில் எப்போது எந்த பாடல் டிரெண்டாகும் என்று யாருக்கும் தெரியாது. அப்படி சமீபத்தில் உலகம் எங்கும் ஏழு லட்சம் பேருக்கும் மேல் ரீல்ஸ் உருவாக்கி டிரெண்டாகிக் கொண்டிருப்பது ஒரு தமிழ் பாடல். நயன்தாரா அதர்வா ராஷி கண்ணா நடித்து 2018 ஆம் ஆண்டு வெளிவந்த இமைக்கா நொடிகள் என்ற படத்தில் இடம்பெற்ற விளம்பர இடைவெளி என்ற பாடல்தான் அது.
ஹிஹாப் தமிழா இசையில் கபிலன்வைரமுத்து எழுதிய பாடல். குறிப்பாக இந்தப் பாடலின் இறுதி வரிகளான “நான் உனதே நீ எனதா ? தெரியாமலே நான் தேய்கிறேன் – இல்லை என்றே சொன்னால் இன்றே என் மோகப் பார்வை மூடுவேன்” என்ற வரிகளைக் கொண்டு உலகம் முழுக்க ரீல்ஸ் உருவாகி பரவிக் கொண்டிருக்கிறது.
இந்தியா மட்டுமின்றி பாகிஸ்தான், ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஸ்பெயின், ஆஸ்திரேலியா, கனடா என்று எல்லா நாடுகளிலும் இது டிரெண்டிங்கில் இருக்கிறது. தமிழே தெரியாதவர்கள் கூட இந்தப் பாடலுக்கு நடனமாடியும் பாடியும் பதிவு செய்து வருகிறார்கள்.
இது குறித்து பாடலாசிரியர் கபிலன்வைரமுத்து தன் முக நூலில் “தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை” என மகிழ்ச்சியோடு பதிவிட்டிருக்கிறார்.