டி.ராஜேந்தர் பாணியில் காதலால் ரசிகர்களை உருக வைக்க வருகிறது ‘உதிர்’!
காலங்கள் மாறினாலும் சரி, மனிதர்களின் வாழ்க்கை முறை மாறினாலும் சரி, காதல் என்ற ஒன்று மட்டும் எப்போதும்
மாறாது. எந்த காலக்கட்டத்திலும் காதல் படங்களுக்கு என்று தனி ரசிகர்கள் இருப்பார்கள், அப்படிப்பட்ட ரசிகர்களோடு
அனைத்து தரப்பு ரசிகர்களையும் டி.ராஜேந்தர் பாணியில் காதலால் உருவ வைக்க வருகிறது ‘உதிர்’.
அறிமுக இயக்குநர் ஞான ஆரோக்கியராஜா கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குவதோடு, இப்படத்தின் பாடல்களை
எழுதி படத்தை தயாரிக்கவும் செய்கிறார். இவர் பள்ளியில் படிக்கும் போதே, டி.ராஜேந்திரன் ‘ஒருதலை ராகம்’, ‘இரயில்
பயணங்களில்’ போன்ற படங்களை பார்த்துவிட்டு, அவரைப் போலவே பாடல்கள் எழுதி படம் இயக்க வேண்டும், என்ற
முடிவுக்கு வந்திருக்கிறார். அந்த நாள் முதல் சினிமா மீது தீராத காதல் கொண்ட ஞான ஆரோக்கியராஜா, தனது முதல்
படமான ‘உதிர்’ மூலம் காதலர்களை உருக வைக்கப் போகிறார்.
பணக்கார வாலிபனுக்கும், கால் இல்லாத பெண்ணுக்கும் இடையே ஏற்படும் காதலும், அதனை சுற்றி நடைபெறும்
சம்பவங்களும் தான் ‘உதிர்’ படத்தின் கதை. கரு எளிமையாக இருந்தாலும், தனது திரைக்கதை, காட்சிகள் மற்றும் வசனம்
மூலம் இப்படத்தை வலிகள் மற்றும் மகிழ்ச்சி நிறைந்த வலிமையான காதல் படமாக ஞான ஆரோக்கியராஜா இயக்கி
வருகிறார்.
சரவணன், சதீஷ் ஆகியோர் ஹீரோக்களாக நடிக்கும் இப்படத்தில் மனிசா, மீனா ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்கிறார்கள்.
இவர்களுடன் தேவதர்ஷினி, ஓ.எஸ்.மணி, மனோபாலா, சிங்கம்புலி, நெல்லை சிவா, போண்டா மணி உள்ளிட்ட பல முன்னணி
நட்சட்த்திரங்கள் நடிக்கிறார்கள்.
அரவிந்த் ஸ்ரீராம் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜோ ஒளிப்பதிவு செய்கிறார். சார்ப் ஆனந்த் படத்தொகுப்பாளராக
பணியாற்றுகிறார். ரஞ்சித், உன்னி மேனன், திப்பு, வைக்கம் விஜயலெட்சுமி ஆகியோர் இப்படத்தின் பாடல்களை
பாடியிருக்கிறார்கள்.
ஜீசஸ் கிரேஸ் சினி எண்டர்டெயின்மெண்ட் (Jesus Grace Cine Endartainment) சார்பில் ஞான ஆரோக்கியராஜா,
புகழேந்தி ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கேரளா, கொடைக்கானல் போன்ற இடங்களில்
நடைபெற்று வருகிறது. தற்போது இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் உள்ள இப்படம் விரைவில் தமிழ் சினிமாவின் சூப்பர் ஹிட்
காதல் படங்களின் பட்டியலில் இடம் பிடிக்க வர உள்ளது.