தமிழ் திரையுலகின் இரும்பு மனிதர் ” சிந்தாமணி முருகேசன் ” : ஓர் பார்வை ( மதிஒளி ராஜா )

ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி படத்தின் மூலம் வினியோகஸ்தராக தனது திரையுலக வாழ்க்கையை ஆரம்பித்தவர் முருகேசன். சிந்தாமணி பிலிம்ஸ் என்ற திரைப்பட வினியோக நிறுவனத்தின் நிறுவன உரிமையாளர்.

தனி தனியாக வினியோகத் தொழில் செய்து கொண்டிருந்த திரைப்பட வினியோகஸ்தர்களுக்குள் ஒற்றுமையை வளர்த்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் வினியோகஸ்தர்கள் சங்கத்தை உருவாக்கி அதன் நிறுவனத்தலைவராக சிங்க நடை போட்டவர். வினியோகஸ்தர்கள் சங்கத்திற்காக சென்னை, சிந்தாதிரிப்பேட்டை, மீரான் சாகிப் தெருவில் உள்ள தனது சொந்த கட்டிடத்தை வினியோகஸ்தர்கள் சங்க அலுவலகமாக அமைத்து அனைத்து வினியோகஸ்தர்களையும் ஒரு குடையின் கீழ் நிறுத்தியவர். மீரான் சாகிப் தெருவை சினிமா சந்தையாகவே மாற்றினார். தயாரிப்பாளர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் பாலமாக வினியோகஸ்தர் சங்கத்தை உருவாக்கியவர்.

தொடர்ச்சியாக 19 ஆண்டுகள் தன்நிகற்ற தலைவராக வீர நடைப் போட்டவர். பெரிய தயாரிப்பு நிறுவனம், உச்ச நட்சத்திரம், மிகப்பெரிய திரையரங்கு உரிமையாளர்கள் என எப்படி பட்ட மாமலைகளையும் தனது இரும்பு கரம் கொண்டு தகர்த்தவர். சமரசம் என்ற வார்த்தையை அறவே தன் வாழ்க்கையில் சந்திக்காத மாவீரன் சிந்தாமணி முருகேசன்.

நியாய தராசாக தீர்ப்புகள் இருக்கும் யாரையும் ஏமாற்றாத தீர்ப்பு. பிரச்சனை வரும் போது இரு சாரரையும் அழைத்து பேசி அதன் பின்னர் அத்துறையின் வல்லுநர்களிடம் கலந்து ஆலோசித்து அதன் படியே முடிவுகள் எடுப்பார், தீர்மானங்கள் போடுவார்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு எனும் வள்ளுவரின் குறள் போல் தனது தலைமையை வகித்தவர். தலைவனாகவே பிறப்பெடுத்த ஓர் மனிதர்.

கம்பீரம், கோபம் மட்டுமில்லாது அனைவரிடமும் அன்பும் அரவணைப்பும் காட்டுவதில் இவருக்கு நிகர் இவரே.

திரையரங்கத்தினர், வினியோகஸ்தரை ஏமாற்றினால் அந்த திரையரங்கிற்கு ” ரெட் கார்டு ” எனும் புதிய சட்டத்தை உருவாக்கி அந்த திரையரங்கத்திற்கு எந்த திரைப்படத்தையும் திரையிட தரக் கூடாது என தடை விதித்து தக்க தண்டனை தந்து வினியோகஸ்தரை காப்பாற்றியவர். தவறு யார் செய்தாலும் தண்டனை நிச்சயம் உண்டு அதில், அவர் இவர் என்று பாரபட்சம் என்றுமே காட்டியதில்லை. இதற்கு சான்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று கூட பாராமல் அனைவருக்கும் என்ன தீர்ப்போ அதே தீர்ப்பை அவருக்கும் வழங்கி நீதி வழுவாமல் வாழ்ந்தவர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் அமைந்துள்ள வினியோகஸ்தர்கள் சங்கத்திற்கே வருகை தந்து இவரது தீர்பை ஏற்று கொண்டார் இரு கரம் கூப்பி இவரிடம் மன்னிப்பும் கேட்டார்.

  • அதே போல் கோடிஸ்வர திரையரங்கு உரிமையாளர்களை கூட கை கட்டி நிற்க செய்தவர் என்றால் இவர் ஒருவர் தான் என்று இன்று கூட தாராளமாக சொல்லலாம். வினியோகஸ்தர்கள் சங்கத்திற்காக சங்கத்தின் நிதியை கொண்டு மீரான் சாகிப் தெருவில் சொந்த கட்டிடம் கட்டி தந்தார் அந்த கட்டிடத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும், சங்க நூலகத்தை நடிகர் புரட்சி கலைஞர் விஜயகாந்த் திறந்து வைத்தார்கள்.

வினியோகஸ்தர்கள் வெறும் வியாபாரிகள் என்பதை மாற்றி தயாரிப்பாளர்கள், ஃபைனான்சியர்களுக்கு கிடைக்கும் மரியாதையை சினிமா வட்டாரத்தில் வினியோகஸ்தர்களுக்கும் வாங்கி தந்தவர் இவர். அனைவரும் எளிதாக
தொடர்பு கொள்ள கூடிய வகையில் மிகவும் எளிமையாகவே இருப்பார். வயது வித்தியாசம் பார்க்காமல் அனைவருடனும் சகஜமாக பழகுவார். நல்ல நகைச்சுவை உணர்வு உடையவர் நெருங்கி பழகியவர்கள் இதை அறிவர். தமிழ் திரையுலக வரலாற்றை இவரது பெயர் இல்லாமல் உருவாக்க முடியாது என தனது ஆளுமையாலும், உதவிகளாலும் வாழ்ந்து கொண்டிருப்பவர்.

19ஆம் தேதி ஜூலை மாதம் 2019 அதிகாலை 1.45 மணிக்கு தனது 80வது வயதில் இயற்கை ஏய்தினார். இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்னர் இயற்கை ஏய்தினார். சிந்தாமணி முருகேசன் அவர்களது வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக திகழ்ந்தவர் அவரது மனைவி என்பதில் மாற்று கருத்து இல்லை. சிந்தாமணி முருகேசன் அவர்கள் வாழ்நாள் முழுவதும் தினந்தோறும் பல பிரச்சனைகளை சந்திப்பவர் இதனால், பல விரோதங்களை சம்பாதித்தார். அதன் மூலம் நிறைய வன்முறைகள், மிரட்டல்கள் என அவருக்கு மட்டுமின்றி அவரது குடும்பத்திற்கும் நிறையவே ஏற்பட்டது. சில சமயங்களில் ரௌடிகளால் கூலிப்படை தாக்குதல்கள் என உயிர் போகும் நிலை கூட சந்தித்தனர் இருந்தாலும் மனம் தளராமல், பயமில்லாமல் அவருக்கு தக்க துணையாக இருந்தவர் இவரது மனைவி. இவர்களுக்கு ஒரே மகன் முத்துகுமரய்யா இவரும் சிறந்த திரைப்பட வினியோகஸ்தராகவும், தொழிலதிபராகவும் விளங்குகிறார்.

திரையுலகிற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த மாவீரன் திரையுலகின் இரும்பு மனிதர் சிந்தாமணி முருகேசன் பல சாதனைகளுக்கு சொந்தகாரர். தனது திரையுலகின் செயல்பாட்டின் மூலமாக அனைத்து திரையுலகினரையும், எதிரிகள் உட்பட எல்லோரையும் “தலைவர்” என்று அழைக்க வைத்தவர் சிந்தாமணி முருகேசன் ஒருவர் மட்டுமே.

You May Also Like

More From Author