Nadhi Movie Review by MATHIOLI RAJAA
சாம் ஜோன்ஸ் கல்லூரி மாணவன், தன் தந்தை முனிஷ் காந்த் ஆட்டோ ஒட்டி வரும் வருமானத்தில் படிக்கிறார். தன் தாய், தந்தை, ஒரு தங்கையுடன் அழகான நடுத்தர குடும்ப வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.
பேட்மிண்டன் போட்டியில் தேசிய அளவில் வெற்றிபெற்று அரசு வேலைக்கு சென்று குடும்பத்தை முன்னேற்ற வேண்டும் என்ற கனவுடன் கல்லூரிக்குள் காலடி எடுத்து வைக்கிறார் நாயகன் சாம் ஜோன்ஸ். அரசியல் செல்வாக்குடனும், சாதி வெறியையும் பற்றிக்கொண்டிருக்கும் குடும்பத்தில் பிறந்த நாயகி கயல் ஆனந்தியும் அதே கல்லூரியில் நுழைய, இருவரின் நட்புக்கும் காதலுக்குமிடையே உறவு ஊசலாடுகிறது.
இவர்களது உறவுக்கு இவரது பெரியப்பா வேல ராமமூரத்தி, பெரியம்மா சிந்து, தந்தை ஏ வெங்கடேஷ் மற்றும் அண்ணன் குறுக்கே நிற்கிறார்கள்.
கயல் ஆனந்தி தாயின் சகோதரர் கரு பழனியப்பன் அரசியலில் தன் அக்காவின் குடும்பத்தை பழி வாங்கும் நோக்கில் இருக்கிறார். அந்த நேரத்தில் சாம் ஜோன்ஸ் – கயல் ஆனந்தி உறவு இவருக்கு சாதகமாக அமைகிறது.
இந்த உறவை காதல்தான் என தீர்மானிக்கும் சாதிய ஆதிக்க கூட்டத்தின் நடுவே சில அரசியல் தகிடுதத்தங்கள் நடக்க, இறுதியில் தன்னுடைய கனவை நாயகன் எட்டிப்பிடித்தானா? நாயகியின் காதல் கைகூடியதா? இருவரையும் சாதிய ஆதிக்க கூட்டம் என்ன செய்தது என்ற புள்ளிக்கு வளைந்து, நெளிந்து நம்மை அழைத்துச்செல்லும் படம் தான் ‘நதி’.
படத்தை தயாரித்து, நடிக்கவும் செய்தியிருக்கிறார் நாயகன் சாம் ஜோன்ஸ். கதை கோரும் நாயகனுக்கான பிம்பத்திலிருந்து சாம் ஜோன்ஸ் சற்றே விலகியிருக்கிறார். அதுவே படத்திற்கு சின்ன குறையாகி விடுகிறது. அதே போல் படம் முழுக்க வெளிப்படுத்தியிருக்கும் அவரது ஒரே மாதிரியான முகபாவனையும், நடிப்பும் படத்திற்கு சிறு சறுக்கல்.
படத்தில் ‘கயல்’ ஆனந்தி, வேல ராமமூர்த்தி, கரு பழனியப்பன் மற்றும் முனீஸ்காந்தின் நடிப்பும் ஆறுதல். கூடவே, ஏ.வெங்கடேசும் வந்துவிடுகிறார். சாதிய படங்களில் பார்த்து பார்த்து பழகிய அவர் முகங்களால் மீண்டும் அதே உணர்ச்சிகளையும், முறுக்கலையும் பார்ப்பது நடிப்பு ஓகே என்றாலும், நடிகர்கள் தேர்வில் மாற்றம் இருந்திருக்கலாம். தவிர, ‘மைக்செட்’ ஸ்ரீராம், கொடங்கி வடிவேலு, ராம்நிஷாந்த் ஆகியோருக்கு அளிக்கப்பட்ட வாய்ப்புகளும், அதனை அவர்கள் பயன்படுத்திக்கொண்ட விதமும் வரவேற்க வேண்டியது.
படத்தை அறிமுக இயக்குநர் தாமரை செல்வன் இயக்கியிருக்கிறார். ‘பொம்பள புள்ளைய உசுறே இல்லாத பொருளாதான் பாப்பீங்களா’ – இந்த வசனம்தான் படத்தின் ஆதிக்கரு. முக்கியமான பேச வேண்டிய வசனமும் கூட. ஆனால், அதையொட்டிய ஓர் அழுத்தமான திரைக்கதையை கட்டியெழுப்பியிருந்தால் நதி, வெள்ளமாக உருப்பெற்று ரசிகர்களை அடித்துச்சென்றிருக்கும். சிக்கல் என்னவென்றால், படத்தின் முதல் பாதி முழுக்க காமெடி என்கிற பெயரில் பார்வையாளர்களை கஷ்டப்படுத்திவிட்டு, நாயகன், நாயகி இடையே நட்பை மலர வைக்க இயக்குநர் போராடியிருக்கிறார்.
அதற்காக எழுதப்பட்ட காட்சிகளில் எந்த வலுவுமில்லை. கருத்தியலாக பார்த்தாலும், ஓரிடத்தில் மைக் செட் ஸ்ரீராம் பிடிச்சிருக்கு என நாயகனை பார்த்து சொல்லும்போது, நாயகன், ‘ச்சீ இங்கையும் வந்துட்டீங்களா?’ என கேட்கும் காட்சிக்கும், வசனத்திற்குமான நோக்கம் என்ன? பார்வையாளர்களை சிரிக்க வைக்கவா? அல்லது வேற என்ன பொருளுக்காக அந்த இடத்தில் அந்தக் காட்சி வைக்கப்பட்டது என தெரியவில்லை. தன்பால் ஈர்ப்பாளர்களுக்கு எதிரான பார்வை மழுங்கப்பட்டு வரும் சூழலில் ‘ச்சீ’ என்பதற்கான அர்த்தம் என்ன?
எடுத்துக்கொண்ட கதையில் கவனம் செலுத்தியிருந்தாலும் கூட, சாதிய ஒடுக்குமுறைகளை அப்பட்டமாக பேசியிருக்கலாம். ஆனால், மேலோட்டமான காட்சிகளால் கருவின் ஆழத்தையும் தொட முடியாததும், முதல் பாதி முழுக்க கதை முழுக்க எந்த திசையுமில்லாமல் நதி பயணிப்பது சோதனை.
எளிதாக கணிக்க கூடிய காட்சிகளால், சுவாரஸ்யமில்லாத இரண்டாம் பாதியும் நம்மை நதியிலிருந்து காப்பாற்ற தவறுகிறது.அச்சாணியான நட்பு, காதல் காட்சிகள் அழுத்தமாக இல்லாததால், அதையொட்டி வெடிக்கும் பிரச்னைகளும், அது ஏற்படுத்தும் பாதிப்புகளும், பார்வையாளர்களுக்குள் எந்த சலனத்தையும் ஏற்படுத்துவதில்லை
திபு நினன் தாமஸின் கடந்த படங்களின் பின்னணி இசையால் ஈர்க்கப்பட்டவர்களுக்கு இப்படம் ஏமாற்றம் கொடுக்க வாய்ப்புள்ளது. பாடல்களும் எடுபடவில்லை. எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு படத்துக்கான தேவையை பூர்த்தி செய்யவில்லை .
மதிஒளி ராஜா