*புதிய படைப்பாளர்கள் மற்றும் குறைந்த பட்ஜெட் திரைப்படங்களை ஊக்குவிக்கும் வகையில் அகில இந்திய அளவில் தொடங்கப்பட்டுள்ள புதிய ஓடிடி தளமான எம்.எஸ்.எஃப்-பின் (மூவி சூப்பர் ஃபேன்ஸ்) முதல் பிரத்தியேக வெளியீடாக முழு நீள நகைச்சுவை திரைப்படம் ‘ரிங் ரிங்’*
திறமைமிகுந்த புதிய படைப்பாளர்கள் மற்றும் குறைந்த பொருட்செலவில் உருவாகும் திரைப்படங்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில் தொழில்முனைவர் ராஜேஷ் கண்ணா, தொழில்நுட்ப தொழில்முனைவோரும் ஓடிடி தளங்களின் கைதேர்ந்தவருமான சுதாகர் சோழங்கத்தேவர் ஆகியோர் இணைந்து அகில இந்திய அளவில் முதல் முன்முயற்சியாக எம்.எஸ்.எஃப் (மூவி சூப்பர் ஃபேன்ஸ்) என்ற புதிய ஓடிடி தளத்தை சமீபத்தில் தொடங்கினர்.
இந்த ஓடிடி தளத்தின் முதல் பிரத்தியேக வெளியீடாக முழு நீள நகைச்சுவை திரைப்படமான ‘ரிங் ரிங்’ வரும் ஜூலை மாதம் 5-ம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது.
திருமணத்திற்குப் பிந்தைய பிரச்சினைகளை மிகவும் நகைச்சுவையான முறையில் ‘ரிங் ரிங்’ விவரிக்கிறது. சக்திவேல் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில் விவேக் பிரசன்னா, சாக்ஷி அகர்வால், சஹானா ஷெட்டி, டேனியல் ஆன் போப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
சமீபத்தில் வெளியான ‘லவ் டுடே’ திரைப்படம் காதலர்களிடையேயான மொபைல் போன் பரிமாற்றத்தின் விளைவுகளை கையாண்ட நிலையில், திருமணமான தம்பதியினரிடையே கைபேசி பரிமாற்றத்தால் ஏற்படும் சிக்கல்களை மிகவும் சுவாரசியமான முறையில் ‘ரிங் ரிங்’ காட்சிப்படுத்தி உள்ளது.
வெறும் 150 ரூபாய் கட்டணத்தில் 48 மணி நேரத்திற்கு இப்படத்தை வாடிக்கையாளர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் ஸ்ட்ரீம் செய்து கண்டு ரசிக்கலாம். ஆண்ட்ராய்டு, இணையம், ஐஓஎஸ், ஃபையர் டிவி ஸ்டிக் மற்றும் ரோகு உள்ளிட்ட தளங்களில் இது கிடைக்கும். Moviesuperfans.com இணையதளத்தில் இத்திரைப்படத்திற்காக முன்பதிவு செய்து கொள்ளலாம். அதிகாரப்பூர்வ உள்ளடக்க பங்குதாரராக ProducerBazaar.com நிறுவனமும் சந்தைப்படுத்தல் பங்குதாரராக யூனிவர்ஸ் என்டர்டைன்மெண்ட்சும் உள்ளனர்.
‘ரிங் ரிங்’ படத்தை வெளியிடுவது பற்றிப் பேசிய ராஜேஷ் கண்ணா, “ஜூலை 5 முதல் இத்திரைப்படத்தை ஸ்ட்ரீம் செய்வதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். ஓடிடி துறையில் ஒரு புதிய முயற்சியாக இது இருக்கும் என்று நான் நம்புகிறேன். புதிய திறமைகள் மற்றும் சிறிய பட்ஜெட் தயாரிப்பாளர்களை ஊக்குவிப்பதே எங்கள் நோக்கமாகும். அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் ‘ரிங் ரிங்’ கவரும்,” என்று தெரிவித்தார்.
சுதாகர் சோழங்கத்தேவர் கூறுகையில், “புதிய படைப்பாளிகளின் உள்ளடக்கத்தை இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் கொண்டு வர எம்.எஸ்.எஃப் முழு வேகத்துடன் செயல்பட்டு வருகிறது. இதற்காக தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். இந்த முயற்சிகளின் முதல் படியாக ‘ரிங் ரிங்’ அமைந்துள்ள நிலையில் விரைவில் இன்னும் பல திரைப்படங்கள் வரவுள்ளன,” என்றார்.
உள்ளடக்க உரிமத்திற்காக எம்.எஸ்.எஃப் உடன் இணைந்திருக்கும் ProducerBazaar.com இணை நிறுவனர் ஜி.கே. திருநாவுக்கரசு கூறுகையில், “சந்ததாரர்களுக்கான சிறப்பான ஒரு நகைச்சுவை விருந்தாக ‘ரிங் ரிங்’ அமையும். இது போன்ற மேலும் பல திரைப்படங்கள் விரைவில் ஸ்ட்ரீம் செய்யப்படும். இம்முயற்சியில் ஒன்றிணைந்துள்ள அனைவருக்கும் சாதகமான சூழலை ஏற்படுவதற்காக தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்,” என்று தெரிவித்தார்.