“மருத” திரைப்பட விமர்சனம் – மதி ஒளி ராஜா

மதுரை மாவட்டத்தில் நடக்கும் சடங்கு சம்பிரதாயம் தான் செய்முறை. கல்யாணம், காதுகுத்து நிகழ்ச்சிகளில் செய்யும் மொய் தான் செய்முறை. இன்றும் சில குடும்ப பாரம்பரியம் இந்த செய்முறையை இன்றளவும் அவர்களது குடும்பத்தில் கடைபிடித்து வருகின்றனர்.

வசதி உள்ளவர்களுக்கு இந்த செய்முறை கௌரவம், மானம், மரியாதை. ஆனால், பண வசதி இல்லாதவர்களுக்கு இந்த செய்முறை ஒரு செய்வினையே.

கதை சுருக்கம் :-

ராதிகா சரத்குமார் – பருத்திவீரன் சரவணன் இருவரும் அண்ணன் தங்கை. ராதிகா மகன் காது குத்து விழாவில் அண்ணன் முறைக்கு சிறப்பாக சீர் செய்கிறார் சரவணன். செய்முறை செய்கையில் இவர் குடும்பத்தில் ஒருவரான வேல ராமமூர்த்தி செய்முறையில் சரவணனை வம்புக்கு இழுக்கும் வகையில் போட்டி போட இதனால் ஊர் சபையில் தான் தான் முறைமாமன் தன் கௌரவம் தான் முக்கியம் என செய்முறையை அதிகம் செய்கிறார்.

ராதிகா தன் அண்ணனிடம் அதிகம் செய்ய வேண்டாம் பதிலுக்கு நாங்களும் உங்களுக்கு இதே போல் செய்ய வேண்டி வரும் தன் குடிகார கணவன் மாரிமுத்து நீ செய்யும் செய்முறை பணத்தை எல்லாம் குடித்தே அழித்து விடுவார் என கெஞ்சுகிறாள். ஆனால் பிடிவாதமாக கௌரவம் தான் முக்கியம் என ஏலம் போல எதிர் நபர் செய்முறையை ஏத்தி விட பலி கிடா ஆகிறார் சரவணன் ரூபாய் 30000 மற்றும் 5 பவுன் தங்க சங்கிலியை செய்முறையை செய்து விடுகிறார்.

இதனால் சரவணனை அவரது மனைவி விஜி சந்திரசேகர் தன் தாய் வீட்டு வரதட்சனையை நீ செய்முறை செய்ய உனக்கு என்ன உரிமை இருக்கு என ஊர் மக்கள் முன்னிலையில் அவமான படுத்துகிறார். பதிலுக்கு உன் தங்கை ராதிகா நமக்கு சரிக்கு சமமாக செய்முறை செய்ய வேண்டும் என எச்சரிக்கிறார்.

அதே போல், அவர்கள் முறை வருகிறது. குடித்தே பணத்தை மாரிமுத்து அழித்ததால் செய்முறைப் பண்ண முடியாமல் விஜியிடம் அவமான பட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறார்.

செய்முறை கடன் பாக்கியுடம் ஏழை விதவை ராதிகா புளி விற்று தன் மகன் ஜிஆர்எஸ் ஐ வளர்த்து ஆள் ஆக்குகிறார். ஆனால், தன் தாயின் வலியும், வேதனையும் அறியாமல் விளையாட்டு பிள்ளையாக ஊதாரி என ஊரில் பெயர் எடுத்து சுத்தி வருகிறார். இது மட்டுமில்லாமல் தன் மாமன் சரவணனின் மகள் லவ்லின் சந்திரசேகரி்டம் வம்பு செய்து வருகிறார்.

ஊர் மக்களுக்கு வட்டி பணம் கொடுத்து திருப்பி தரவில்லை என்றால் ஆண் என்று கூட பார்க்காமல் நடு தெருவில் காலால் எட்டி உதைத்து அசிங்க படுத்தி எப்படியாவது கடன் பணத்தை வாங்கி விடுவார் விஜி.

ராதிகா மேல் பாசம் கொண்ட சரவணன் பல முறை பேச, பதில் பேச மறுக்கிறார் ராதிகா. அண்ணன் மகள் லவ்லின் மேல் மட்டும் பாசம் காட்டுகிறார் ராதிகா.

ராதிகாவை மிகவும் நேசிக்கும் லவ்லின் அவருக்காக அவரது மகன் ஜிஆர்எஸ் ஐ திருமணம் செய்ய சம்மதிக்கிறார். ஆனால், அவரது தாய் விஜி இதை விரும்பாமல் வேறு வசதியான மாப்பிள்ளையை பார்க்கிறார்.

திருமணத்திற்காக செய்முறை நிகழ்வு நடத்துகிறார் அதனால் ராதிகா தான் தர வேண்டிய செய்முறை பாக்கி மீண்டும் செய்யும் நிலைக்கு தள்ளப்படுகின்றார். கையில் பணம் இல்லை தன் மகனும் சரியாக சம்பாதிக்கவில்லை எனும் சுழல்.

இதற்கு விளக்கம் என்ன என்பதே மீதிக் கதை.

ராதிகா சரத்குமார் – சரவணன் அமைதி, அழுகை என படத்தின் காட்சிகளுக்கு உயிர் கொடுத்துள்ளார்கள். மாரிமுத்து – வேல ராமமூர்த்தி சின்ன வேடம் தான் என்றாலும் தங்களது நடிப்பு மூலம் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளார்கள்.

விஜி சந்திரசேகர் நடிப்பில் சூறாவளி தனது காளி கதாப்பாத்திரத்தில் இதுவரை பெண் எதிர்மறை வேடத்தில் யாரும் செய்யாத அளவு உணர்ச்சிபூர்வமாக மிக அற்புதமாக நடித்துள்ளார்.

படத்தின் நாயகன் மட்டுமில்லாமல் இப்படத்தின் இயக்குனர் ஜிஆர்எஸ் இயக்குநராக மிரட்டி இருக்கிறார். நாயகனாக சிலுமிஷம் செய்யும் கதாப்பாத்திரம் என கேலி, கிண்டல் என மக்கள் ரசிப்பார்கள் என நினைத்து அவர் நடிக்க அது எடுப்படவில்லை மாறாக, எரிச்சலை உண்டாக்கும் விதமாக அமைந்து விட்டது.

லவ்லின் சந்திரசேகர் தமிழ்த் திரைப்பட உலகத்திற்கு கிடைத்த அருமையான நடிக்க தெரிந்த இளம் நாயகி கிடைத்து இருக்கிறார். தனது நடிப்பில் பலவித சூழ்நிலையை உணர்ந்து நடித்துள்ளார்.

கஞ்சா கருப்பு 4 காட்சிகள் படத்திற்கு சம்மந்தமில்லாமல் வந்து போகிறார். நகைச்சுவை சுத்தமாகவே வரவில்லை.

இளையராஜா இசை பின்னணி இசையில் முன்னணி வகித்து முத்தான பாடல் வழங்கி படத்தின் முதுகெலும்பாக திகழ்கிறார்.

எஸ்பி பாலசுப்ரமணியம் குரலும், சித் ஶ்ரீராம் குரலும் பாடல்களுக்கு மேலும் அழகு கூட்டியுள்ளது.

ஒளிப்பதிவு ரமேஷ் காட்சிகளில் ஓவியம் தீட்டியுள்ளர். இப்படத்தில் மர இலைக்கு முக்கியத்துவம் கொடுத்து அதன் வாயிலாக அவர் வைத்த கோணம் மிக அருமை.

வசனம் மிக மிக அதிகம். படம் ஆரம்பம் முதல் முடிவு வரை பாத்திர கடைக்குள் யானை புகுந்தது போல் வசனத்தில் அதிக சத்தம். படத்தின் நீள அளவும் அதிகம்.

பாச உணர்வு கொண்ட படம் பார்த்து ரொம்ப நாட்கள் ஆகி விட்டது. அந்த ஏக்கத்தை இந்தப் படம் தீர்த்து விட்டது. ராதிகா சரத்குமார் நடிப்பும் – பருத்திவீரன் சரவணன் நடிப்பும் இப்படத்தை கிழக்கு சீமையிலே படத்தின் சாயல் வராமல் செய்தது மிக சிறப்பு.

இதுவரை யாரும் சொல்லாத செய்முறை பற்றிய கதைக்களம் மிக அருமை. தன் குருநாதர் பாரதிராஜாவின் சிஷ்யன் என்பதை நிரூபித்து விட்டார் இயக்குநர் ஜிஆர்எஸ்.

பாசம் நேசம் இன்றும் இருக்கிறது என்பதை நிரூபித்து இருக்கும் படம். நிச்சயம் அனைத்து மக்களையும் கவரும்.

தயாரிப்பு நிறுவனம் : பிக் வே பிக்சர்ஸ்

தயாரிப்பாளர் : சபாபதி

இசை : இசைஞானி இளையராஜா

இயக்கம் :  ஜிஆர்எஸ்

நடிகர்கள்:

ராதிகா சரத்குமார், பருத்திவீரன் சரவணன், விஜி சந்திரசேகர், ஜிஆர்எஸ், லவ்லின் சந்திரசேகர், வேல ராமமூர்த்தி, மாரிமுத்து, கஞ்சா கருப்பு

ஒளிப்பதிவு : பட்டுக்கோட்சை ரமேஷ் B

பாடல் ஆசிரியர் : பழனி பாரதி,

ARP. ஜெயராம்

பாடகர்கள்: S. P பாலசுப்பிரமணியம்,

சித் ஸ்ரீராம்

மதி ஒளி ராஜா

 

 

 

 

 

 

 

 

You May Also Like

More From Author