ஊர்வசி நடிப்பில் “J.பேபி” திரைப்பட விமர்சனம் – மதிஒளி ராஜா

நீலம் புரொடக்ஷன்ஸ், நீலம் ஸ்டுடியோஸ், விஸ்டா மீடியா சார்பில் இயக்குனர் பா. இரஞ்சித், அபயானந்த் சிங், பியூஷ் சிங், சௌரப் குப்தா, அதிதி ஆனந்த், அஷ்வினி சௌத்ரி தயாரிப்பில், அறிமுக இயக்குனர் சுரேஷ் மாரியின் இயக்கத்தில், ஊர்வசி, அட்டக்கத்தி தினேஷ், மாரன், மூர்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் “J. பேபி”.

சென்னையில் காணாமல் போன அம்மா (ஊர்வசி) வை தேடி நீண்ட காலமாக பேசிக்கொள்ளாத இரண்டு மகன்கள் (அட்டக்கத்தி தினேஷ் – மாரன்) கொல்கத்தா செல்லும் கதை. குடும்ப உறவுகள் பற்றி ஆழமாக பேசும் கதை. கூட்டு குடும்பத்தின் மகத்துவத்தை பேசும் படம்.

5 பிள்ளைகளுக்கு தாயாக, பேரக்குழந்தைகள் என ஊர்வசி தாயாக, பாட்டியாக, அனைவரின் மீதும் அன்பும், உதவும் குணமும் கொண்ட கதாப்பாத்திரம். தொடர் துயர் சம்பவங்களால் இவருக்கு மன சிதைவு ஏற்படுகிறது. அதனால், அந்த பகுதி மக்கள் பாதிக்கப் படுகிறார்கள். குடும்பத்தினரும் இவர்களால் பல இன்னல்கள் சந்திக்கின்றனர்.

இவர் காணாமல் போன பிறகு, இவரை தேடி போகும் போது தான் இவரின் பாசம் – நேசம் – அன்பு என அனைத்து பிள்ளைகளுக்கும் புரிகிறது. தேடி போகும் மகன்களுக்கு முன்னாள் இராணுவ அதிகாரி மூர்த்தி உதவுகிறார்.

தேடி சென்ற இடத்தில் அம்மாவை ஏன் பார்க்க முடியவில்லை? அங்கே என்ன வம்பு செய்து இருந்தார் ஊர்வசி? மீண்டும் குடும்பத்துடன் ஊர்வசி இணைந்தாரா? கொல்கத்தா சென்ற மகன்கள் சென்னை திரும்பியது ஏன்? இன்றைய சூழலில் குடும்ப உறவுகளில் பிணைப்பு இருக்கிறதா? தொலைந்த நம் முன்னோர் காலத்தில் வாழ்ந்த வாழ்க்கை மீண்டும் நமக்கு கிடைக்குமா? என்பதை வெள்ளித்திரையில் குடும்பத்துடன் காண்க.

இந்திய திரையுலகின் தலைசிறந்த நடிகை ஊர்வசி அவர்களின் நடிப்புக்கு தீனி போடும் கதாப்பாத்திரம் J பேபி. இப்படத்தில் தன்னிகரில்லா நடிப்பின் மூலம் இன்னும் பெரிய உயரம் தொட்டிருக்கிறார். இந்த ஆண்டின் சிறந்த நடிகைக்கான விருது நிச்சயம் J பேபி ஊர்வசிக்கே.

முந்தானை முடிச்சு – பரிமளம், மைக்கேல் மதனகாமராஜன் – திருப்புரசுந்தரி போல் J. பேபியில் – J பேபி கதாப்பாத்திரம் ஊர்வசிக்கு காலத்திற்கும் நின்று பேர் சொல்லும் கதாப்பாத்திரம்.

அட்டக்கத்தி தினேஷ் தன்னுடைய இயல்பான நடிப்பில் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். தன் அம்மா ஊர்வசியை மக்கள் மத்தியில் அடிக்கும் காட்சியில், பிறகு அதற்காக அம்மாவிடம் வருந்தும் போதும் நம்மை கலங்க வைக்கும் சிறந்த நடிப்பு. மாரன் இதுவரை நகைச்சுவை நடிப்பை மட்டுமே வெளிப்படுத்தி வந்தவர் இப்படத்தின் மூலம் குணச்சித்திர வேடத்திலும் கலக்கி இருக்கிறார். நகைச்சுவையும் அங்கே அங்கே வெளிப்படுத்துகிறார். தன் தம்பியை பிடிக்காததால் இரு சக்கர வாகனத்தில் மூவர் செல்லும் போது சற்று விலகி அமர்ந்து பயணிப்பது அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறது.

புதியமுகம் என்று தெரியாத அளவுக்கு மூர்த்தியின் நடிப்பு சிறப்பு. தெளிவாக தனது வேடத்தில் கச்சிதமாக பொருந்துகிறார். மற்ற வேடத்தில் நடித்த அனைவரும் மிக சிறப்பாக நடித்திருப்பது படத்திற்க்கு கூடுதல் இயல்பு தன்மையை கொடுத்துள்ளது.

ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு சென்னை வட்டார பகுதியிலும் சரி, கொல்கத்தா நகரில், சாலையில், மக்கள் மத்தியில் இவர் படம் பிடித்து நம் பார்வைக்கு விருந்து படைத்து இருக்கிறார். டோனி பிரிட்டோ இசையில் பாடலிலும் – பின்னணி இசையிலும் ஜீவன் சேர்த்து இருக்கிறார். சண்முகம் வேலுச்சாமி படத்தொகுப்பு திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறது. ராமு தங்கராஜின் கலை இயக்கம் இயல்பின் உதாரணம். இயக்குனர் சுரேஷ் மாரியின் வாழ்வில் தன் சொந்த குடும்பத்தில் நிகழ்ந்த உண்மை சம்பவம் தான் J பேபி. திரைக்கதையில் இவரின் திறமைக்கு சபாஷ் போடலாம். வசனம் மிக நேர்த்தி. அறிமுக இயக்குனர் என்று கூற முடியாது. சிறந்த இயக்குனர்களின் படங்களில் வேலை செய்த அனுபவம் இப்படத்தை மிக சிறந்த படமாக உருவாக்க உதவியுள்ளது

“J பேபி” மிக சிறந்த படமாக குடும்பத்துடன் பார்த்து கொண்டாட வேண்டிய படம். இப்படம் பார்த்து பாசத்தின் உணர்வுகளை மீண்டும் அசைப்போடலாம். மிக சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம். அனைத்து வயதினரையும் கவரும் படம்.

 

ஊர்வசி – J. Baby

தினேஷ் – Sankar

மாரன் – Senthil

சேகர் நாராயணன் – Sakthi

மெலடி டார்கஸ் – Selvi.

தாட்சாயிணி – Ramani,

இஸ்மத் பானு – Sankar Wife,

சபீதா ராய் – Senthil Wife

மாயா ஸ்ரீ – Sakthi Wife

Producers : Pa.Ranjith, Abhayanand Singh, Piiyush Singh, Sourabh Gupta, Aditi Anand, Ashwini Chaudhari.

Neelam Productions, Neelam Studios, Vistas Media.

இசை – டோனி பிரிட்டோ.

ஒளிப்பதிவு – ஜெயந்த் சேது மாதவன்,

எடிட்டிங் – சண்முகம் வேலுச்சாமி,

கலை – ராமு தங்கராஜ்,

பாடல்கள் – கபிலன் உமாதேவி , விவேக்.

எழுத்து இயக்கம் – சுரேஷ் மாரி

#jbabymoviereview #jbabymovie #jbabyreview #jbaby #fdfs #tamilfilmreview #moviereview #movie #review #film #cinema #flick #theatre #audience #boxoffice

"Mathioli" RAJAA

மதிஒளி ராஜா

You May Also Like

More From Author